Categories
மாநில செய்திகள்

செல்பி எடுக்க முயன்ற வாலிபர்…. 500 அடி பள்ளத்தில் விழுந்து மாயம்…. பெரும் பரபரப்பு….!!!!

கொடைக்கானல் வட்டக்கானல் அருகே வனத்துறையினரால் தடை செய்யபட்ட ரெட்ராக் பகுதியில் செல்பி எடுக்க முயன்ற மதுரையை சேர்ந்த வாலிபர் மாயமாகியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு நேற்று முன்தினம் மதுரை அண்ணாநகர் பகுதியில் இருந்து 8 பேர் கொண்ட வாலிபர் குழுவினர் சுற்றுலா வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்த வாலிபர்கள் வட்டக்கானல் அருகே உள்ள வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட ரெட்ராக் பகுதிக்கு சென்றுள்ளனர். இந்த பகுதி மலை முகடுகள் நிறைந்த பச்சை பசேல் என்று ரம்மியமாக காட்சியளிப்பதுடன், ஆபத்தான பள்ளத்தாக்குகள் நிறைந்த பகுதியுமாகும்.

இந்த பகுதியை பார்த்து ரசித்த பின் வாலிபர் குழுவினர் இதே பகுதியில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மது அருந்திவிட்டு வாலிபர்கள் செல்பி எடுத்துள்ளனர். இந்நிலையில் ராம்குமார் என்ற வாலிபர் மட்டும் பாறையின் நுனி பகுதிக்கு சென்று செல்பி எடுக்க முயன்றபோது நிலை தடுமாறி சுமார் 500 அடி பள்ளத்தில் விழுந்து மாயமானதாக கூறப்படுகிறது. அதன்பின் மாயமான ராம்குமாரை உடன் வந்த வாலிபர்கள் நீண்டநேரம் தேடியதாக கூறப்படுகிறது.

எனினும் ராம்குமார் கிடைக்காததால் மற்ற வாலிபர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ராம்குமார் மாயமானது குறித்து வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில் அனைவரும் மது போதையில் இருந்ததாகவும், செல்பி எடுக்கும் போது ராம்குமார் தவறி விழுந்ததாகவும் முதற்கட்ட காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாயமான வாலிபரை தேடி வருகின்றனர். இவ்வாறு சுற்றுலா வந்த வாலிபர் 500 அடி பள்ளத்தில் விழுந்து மாயமான சம்பவம் வட்டக்கானல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |