2 சமூகத்தை சேர்ந்தவர்களிடையே தகராறு ஏற்பட்டதால் அப்பகுதியில் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடி கிராமத்தில் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் தினத்தன்று ஒரு சமூகத்தை சேர்ந்த சில வாலிபர்கள் சாலையில் நின்று செல்பி எடுத்து கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து சாலையில் நின்று கொண்டிருந்த வாலிபர்களை ஓரமாக சென்று செல்பி எடுக்கும்படி கூறியுள்ளார்.
ஆனால் அந்த வாலிபர்கள் வேண்டுமென்றே சாலையை மறித்துக்கொண்டு அந்த நபரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனைதொடர்ந்து அந்த நபர் உடனடியாக அவரது ஆதரவாளர்களை தொடர்புகொண்டு வரவழைத்தார். இதனையறிந்து சென்ற அவரது சமூகத்தினர் தகராறில் ஈடுபட்ட வாலிபர்களை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த 2 சமூகத்தை சேர்ந்தவர்கள் அதே இடத்தில் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.