ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி மைசூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து செல்வது வழக்கம். தற்போது அந்த பகுதி பசுமையாக இருப்பதால் சாலையோரம் முகாமிட்டு யானைகள் தீவனம் உண்ணுகின்றன. நேற்று மதியம் ஒரு யானை திம்பம் செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக சென்ற 2 பேர் யானையுடன் செல்பி எடுக்க முயன்ற போது கோபமடைந்த யானை அவர்களை துரத்தியது. இதனால் 2 பேரும் அங்கிருந்து வேகமாக தப்பி சென்றனர். இந்நிலையில் யானைகளுடன் செல்பி எடுப்பது மிகவும் ஆபத்தானது. அப்படி எடுத்தால் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.