காட்டுயானைகள் கூட்டமாக வாலிபர்களை துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோடை காலம் தொடங்கி விட்டதால் வனப்பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கிறது இதன் காரணமாக வன விலங்குகள் உணவு தண்ணீர் இன்றி தவிக்கின்றது. இதனால் வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர ஆரம்பித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டேரி, ரன்னிமேடு, கிளிண்டன் எஸ்டேட் உள்ளிட்ட பல பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளது. இந்நிலையில் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையை காட்டு யானைகள் கூட்டமாக கடந்து சென்றுள்ளது.
இதைப்பார்த்த வாகன ஓட்டிகள் சாலையின் ஓரமாக வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். அப்போது சில வாலிபர்கள் காட்டு யானைகளுடன் சேர்ந்து செல்பி எடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த காட்டு யானைகள் வாலிபர்களை துரத்தியுள்ளது. இதனால் அச்சமடைந்த வாலிபர்கள் அங்கிருந்து ஓடினர். அதன்பிறகு காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சியை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். தற்போது இந்த காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.