சென்னையில் குடும்பத்தகராறு கணவன் செல்போனால் தாக்கியதில் மனைவியின் கண் பார்வை பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விருகம்பாக்கம் தாங்கல் உள்வாயில் தெருவில் லோகேஸ்வரன், சித்ரா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. அதன்பிறகு லோகேஸ்வரன் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு, மது போதையில் வந்து அடித்து உதைத்து கொடுமை செய்து வந்துள்ளார். அதுமட்டுமன்றி லோகேஸ்வரனுக்கு மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதுபற்றி அறிந்த சித்தரா தனது கணவரிடம் கடந்த மாதம் 25ஆம் தேதி சண்டை போட்டுள்ளார்.
அதனால் இருவருக்கும் இடையே தகராறு முற்றியது. அதனால் ஆத்திரமடைந்த லோகேஸ்வரன், கையிலிருந்த செல்போனை மனைவி முகத்தில் வீசியுள்ளார். அப்போது செல்போன் சித்ராவின் இடது கண்ணில்பட்டதால் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் சித்ராவின் இடதுகண் பறி போனது தெரியவந்தது. இந்த சம்பவம் பற்றி வடபழனி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்ராவின் கணவர் லோகேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.