வீட்டின் தனியாக இருந்த பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்துள்ள பள்ளமோர்க்குளம் கிராமத்தில் வசித்து வந்த அமீர் தற்போது சென்னையில் பணிபுரிந்து வருவதால் அவரது மனைவி யாஷ்மின் ஷமீனா குழந்தைகளுடன் ஊரில் தனியாக வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை ஷமீனா வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது மர்மநபர்கள் 2 பேர் அவர் வீட்டின் பின்புற கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
இதனையடுத்து ஷமீனா அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளனர். அப்போது விழித்துக்கொண்ட ஷமீனா அந்த மர்மநபர்களை பிடிக்க முயன்றதில் மர்மநபர் ஒருவரின் செல்போனை அங்கேயே தவறவிட்டு தப்பியோடியுள்ளனர். இதனைதொடர்ந்து ஷமீனா அந்த செல்போனை எடுத்துகொண்டு கீழக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் யாஸ்மின் ஷமீனா வீட்டில் திருடியது வேதாளை பகுதியை சேர்ந்த வாசுதேவன், சிவகங்கையை சேர்ந்த பால்பாண்டி என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிவகங்கையில் பதுங்கி இருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்து ஷமீனாவின் தங்க சங்கிலியை மீட்டுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.