சிறுமியை கடத்தி சென்ற நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரத்தில் தங்கியிருந்து ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மணிகண்டன் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மணிகண்டன் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமி தனது பெற்றோரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது இப்போது தான் எனக்கு தெரியும் என கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டனர். மேலும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.