சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வாலிபரை தாக்கி ஆபாசமாக வீடியோ எடுத்து கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி காளவாய்பொட்டல் பகுதியில் மணிகண்டன் ( 20 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மருத்துவமனை சாலையில் செல்போன் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும், சத்யா நகரில் வசித்து வரும் ரூபன் என்பவருக்கும் இடையே செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரூபனின் நண்பர்களையும் மணிகண்டன் திட்டியதாக தெரிகிறது. அப்போது அதனை ஆடியோவாக பதிவு செய்த ரூபன் அதனை தனது நண்பர்களிடம் போட்டு காட்டியுள்ளார். இதனால் அவர்கள் ஆத்திரமடைந்து நாட்டார் கண்மாய் என்ற இடத்தில் மணிகண்டனை மிரட்டி கடத்தி சென்றுள்ளனர். அங்கு மணிகண்டனை அவர்கள் ஆபாசமாக பேசியதோடு ஆடைகளை களைய செய்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
மேலும் அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டு வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் நடந்து ஆறு நாட்கள் ஆகியும் இதுகுறித்து மணிகண்டன் யாரிடமும் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் ரூபனின் நண்பர்கள் எடுத்த வீடியோ வைரலாக பரவி மணிகண்டனின் பெற்றோர் பார்வைக்கும் சென்றது. இது குறித்து காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் மணிகண்டனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல்துறையினர் சத்யா நகரை சேர்ந்த அஜித், சரண்ராஜ், விஜி ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் ரஞ்சித், ரூபன், சுபாஷ் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.