நூதன முறையில் வாலிபரிடம் இருந்து பண மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள துலுக்கநத்தம் கிராமத்தில் சாதிக் பாஷா(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை வேண்டி இணையதள முகவரியில் தனது விவரங்களை பதிவு செய்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் சாதிக் பாஷாவின் இணையதளம் முகவரிக்கு சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை தருவதாக கூறி ஒரு தகவல் வந்தது. அதில் ஆன்லைன் மூலம் நேர்காணல் நடத்தப்படும் என குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் ஒருவர் சாதிக் பாஷாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஆன்லைன் மூலம் நேர்காணல் நடத்துவது போன்று நடத்தி, பணியில் சேர பாதுகாப்பு கட்டணம், இன்சூரன்ஸ், விசா, சர்வீஸ் கட்டணம் ஆகியவற்றிற்கு பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். அந்த நபர் கூறியதை நம்பி 7 தவணைகளாக சாதிக்பாஷா ஒரு லட்ச ரூபாயை அவர் கூறிய வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். இதுவரை சாதிக் பாஷாவிற்கு சிங்கப்பூரில் வேலை கிடைக்கவில்லை. அந்த நபர் பணத்தையும் திரும்ப தரவில்லை. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் சாதிக்பாஷா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.