மூதாட்டி ஒருவர் கொரோனா பாசிட்டிவ் என்று செல்போனுக்கு தகவல் வந்ததால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த பீலேரி பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் இருந்துள்ளதால் கலிகிரி அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து வீட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பதாக தகவல் வந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மூதாட்டி திடீரென கீழே மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவருடைய கணவர் மற்றும் மகன் அவரை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.