காதலியை கழுத்தை இறுக்கி சிறுவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகில் நொச்சிபட்டியில் தனியார் கோழிப் பண்ணை ஒன்று அமைந்துள்ளது. இங்கு வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் நிறைய பேர் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். அதேபோன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒருவர் வேலை பார்த்து வருகிறார். அவரிடம் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அவருடைய நண்பர் 17 வயது சிறுவன் தனக்கும் கோழிப்பண்ணையில் வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் சம்மதம் தெரிவித்ததால் சிறுவன் தனது காதலி போதி மாண்டவி என்பவருடன் மோகனூர் அருகில் நொச்சிபட்டிக்கு வந்தார்.
இதனை அடுத்து சிறுவன், காதலி போதி மாண்டவி ஆகியோரை கோழிப்பண்ணை உரிமையாளருடன் சிறுவனின் நண்பர் அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு கோழிப்பண்ணை உரிமையாளர் இங்கு குழந்தைகள் தொழிலாளர்களை வேலைக்கு சேர்ப்பது கிடையாது என்று தெரிவித்தார். இதனையடுத்து அவர்கள் சொந்த ஊருக்கு செல்லும் வரை சிறுவன் அவனுடைய காதலி ஆகியோர் பண்ணையிலுள்ள தங்கள் மாநிலத்தவரின் வீட்டில் தங்கி இருந்துள்ளார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் சிறுவன் செல்போனில் வேறு ஒரு பெண்ணிடன் பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த போதி மாண்டவி யாருடன் பேசிக் கொண்டு இருக்கின்றாய் என்று கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சிறுவன் காதலி என்று பார்க்காமல் துப்பட்டாவை வைத்து போதி மாண்டவின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார். இதையடுத்து சிறுவன் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டான். இதுகுறித்து மோகனூர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போதி மாண்டவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொலை வழக்கு பதிந்து காவல்துறையினர் தப்பியோடிய சிறுவனை கைது செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.