நூதன முறையில் முதியவரிடம் திருட்டு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியில் மத்திய அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து உங்களுடைய செல்போனில் ரீசார்ஜ் முடிவடைந்து விட்டது, உடனடியாக ரீசார்ஜ் செய்யுங்கள் என பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து பேசுவது போல் கூறியுள்ளார். இதை நம்பிய முதியவரும் தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து செல்போனுக்கு ரீசார்ஜ் செய்துள்ளார். இவர் ரீசார்ஜ் செய்த சில மணி நேரங்களிலேயே முதியவரின் வங்கி கணக்கில் இருந்து 10 லட்சம் ரூபாய் வரை திருடப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர் கீழ்ப்பாக்கம் சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் துணை கமிஷனர் கோபி அதிரடியாக நடவடிக்கை எடுத்து முதியவரின் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்ட ரூ. 10 லட்சம் பணத்தில் 7 லட்ச ரூபாயை உடனடியாக மீட்டார். மேலும் மோசடி செய்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருவதோடு, ஆன்லைன் வங்கி கணக்கிலிருந்து போன் செய்து பணம் கட்ட சொன்னால் பொதுமக்கள் யாரும் நம்பி பணம் கட்ட வேண்டாம் எனவும் கமிஷனர் எச்சரித்துள்ளார்