Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

செல்போனுக்கு வந்த குறுந்தகவல்… போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் வங்கி கணக்கில் பணம் மோசடி…. ரூ 1 1/4 லட்சம் பணத்தை மீட்டுக் கொடுத்த சைபர் கிரைம் போலீசார்…!!!

போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் வங்கி கணக்கிலிருந்து மோசடி செய்யப்பட்ட ரூ 1 1/4 லட்சம் பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடப்பட்டி அண்ணா நகரில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன்(65). இவர் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். மேலும் இணையதள பரிவர்த்தனைக்காக அந்த வங்கி சார்பாக வழங்கப்படும் செல்போன் செயலியை பயன்படுத்தி வருகின்றார். இந்நிலையில் அந்த செல்போன் செயலில் சில சிறப்பு அம்சங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும், அதற்காக இந்த லிங்கை பயன்படுத்த வேண்டும் என்று நடராஜனின் செல்போனுக்கு வங்கியிலிருந்து அனுப்பியது போல ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதை உண்மை என்று நம்பிய நடராஜன் அந்த லிங்கை பயன்படுத்தி உள்ளார்.

அப்போது அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 2,81,800 எடுத்ததாக மெசேஜ் வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடராஜன் வங்கிக்கு சென்று விசாரித்தபோது இணையதளம் மூலம் மர்ம நபர்கள் அவருடைய வங்கிக் கணக்கில் பணத்தை மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நடராஜன் திண்டுக்கல் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணை முடிவில் பணத்தை மோசடி செய்தவரிடமிருந்து 1,29,800-யை சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் மீட்டு உள்ளார்கள். இதனை அடுத்து போலீஸ் சுப்பிரண்டு சீனிவாசன் அந்த பணத்தை நடராஜனிடம் கொடுத்தார். மேலும் நடராஜனிடம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

Categories

Tech |