தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் கூலி தொழிலாளியான லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது 2-வது மகள் கீர்த்தனா(17) நம்பியூரில் இருக்கும் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக கீர்த்தனா கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று காலை வேலைக்கு சென்று விட்டு மதிய நேரத்தில் லட்சுமணன் வீட்டிற்கு சாப்பிடுவதற்காக வந்தபோது, கீர்த்தனா செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.
உடனடியாக லட்சுமணன் தனது மகளை கண்டித்ததோடு, வேலைக்கு செல்லும்போது கீர்த்தனாவிடம் இருந்து செல்போனை வாங்கிக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கீர்த்தனா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்த லட்சுமணன் நீண்ட நேரமாக கதவை தட்டியுள்ளார்.
ஆனாலும் கீர்த்தனா கதவை திறக்காததால் சந்தேகமடைந்த லட்சுமணன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தனது மகள் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு கீர்த்தனாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.