விவசாயி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள செம்பியநத்தம் ஊராட்சியில் விவசாய ரமேஷ்(42) என்பவர் வசித்து வருகிறார். இவரது தோட்ட நிலத்திற்கு அருகே அதே பகுதியில் வசிக்கும் விவசாயி லோகநாதன்(43) என்பவரது நிலமும் அமைந்துள்ளது. இந்நிலையில் ரமேஷ் தனது வீட்டில் சேகரித்த குப்பைகளுக்கு தீ வைத்த போது லோகநாதன் வீட்டில் இருந்த வாழைமரம் மற்றும் பிற மரங்கள் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து லோகநாதன் பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் போலீசார் விசாரணை நடத்துவதற்காக ரமேஷை அழைத்துள்ளனர்.
போலீஸ் விசாரணைக்கு பயந்த ரமேஷ் செம்பியநத்தம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே இருக்கும் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி சுமார் 200 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரமேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் பயனில்லை. இதனால் தீயணைப்பு துறையினரை வரவழைத்து ரமேஷை பத்திரமாக கீழே இறக்கினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 5 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.