Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல்…. 5 மணி நேரம் திணறடித்த நபர்…. பரபரப்பு சம்பவம்….!!

செல்போன் கோபுரத்தின் மீது ஏறி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமசாமி முதலியார் வீதியில் சசிகுமார் என்பவரது வீட்டில் முதல் தளத்தில் செல்போன் கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஏறியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் அவரை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். அப்போது தனது மனைவி கள்ளக்காதலனுடன் சென்றுவிட்டார். அவரை மீட்டு தரவில்லை என்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என அந்த நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வீரன்(54) என்பது தெரியவந்தது. இவர் கோவை உக்கடம் கரும்பு கடை பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். நீங்கள் கீழே இறங்கி வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியும் அவர் கீழே இறங்க மறுப்பு தெரிவித்தார். இதனால் தீயணைப்பு வீரர் ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏற முயன்றதை பார்த்த வீரன் யாராவது மேலே வந்தால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என மீண்டும் மிரட்டியுள்ளார்.

மேலும் அங்கிருந்த கம்பியை எடுத்து உடலில் கீறி கொண்டதால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து செல்போன் கோபுர நிறுவன ஊழியர்கள் நைசாக பேச்சு கொடுத்து கீழே இறங்குமாறு கேட்டு கொண்டதால் மாலை 5.30 மணிக்கு வீரன் கீழே இறங்கி வந்தார். பின்னர் காயம் ஏற்பட்டதால் வீரனை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சுமார் 5 மணி நேரமாக செல்போன் கோபுரத்தின் மீது ஏறி வீரன் மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |