செல்போன் கோபுரம் அமைத்து தருவதாக கூறி விவசாயிடம் இருந்து நூதன முறையில் பணமோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏப்பாக்கம் கிராமத்தில் முத்துபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முத்து பாலகிருஷ்ணனின் செல்போனிற்கு மர்மநபர் ஒருவர் போன் செய்து தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவருடைய நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்க உள்ளதாகவும், அதற்கு ரூ.30 லட்ச ரூபாய் முன்பணமாகவும், மாதத் தவணையாக தருவதாகவும் ரூ.35 ஆயிரம் தருவதாகவும் கூறியுள்ளார். மேலும் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு தேவையான பொருட்களை அனுப்பி வைப்பதற்காகவும், ஜி.எஸ்.வரி சேர்த்து பணம் கட்ட வேண்டும் என கூறியுள்ளார்.
இதனால் முத்துபாலகிருஷ்ணன் கூகுள் பே மற்றும் தனது நண்பரின் போன் பே மூலம் ரூ.74,750-ஐ அனுப்பியுள்ளார். இந்நிலையில் அவர் பேசியபடி செல்போன் கோபுரம் அமைப்பதற்கு யாரும் வராததால் தான் ஏமாற்றம் அடைந்ததை அறிந்த முத்துபாலகிருஷ்ணன் இதுகுறித்து விழுப்புரம் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பணமோசடி செய்த மர்ம நபரை வலைவீசித் தேடி வருகின்றனர்.