பண மோசடி செய்த வழக்கில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த 11 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள தாசநாயக்கன்பட்டியில் சம்பத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கைபேசிக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜில் உங்களுடைய நிலத்தில் கைபேசி டவர் அமைக்க இருப்பதாகவும், அதற்காக முன்பணம் செலுத்த வேண்டும் எனவும் இருந்துள்ளது. இதை நம்பி அந்த முதியவர் 2,90,624 ரூபாயை அந்த முகம் தெரியாத நபரிடம் கொடுத்துள்ளார். அதன்பின் தான் ஏமாந்ததை அறிந்து கொண்ட சம்பத்குமார் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்துள்ளனர்.
அப்போது வெளி மாநிலத்தைச் சேர்ந்த சமசாபேகம், சுர்ஜித் குமார், மும்தாந்சஞ்சல், அஞ்சன் சன் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். இதேபோன்று வாழப்பாடி பகுதியில் வசிக்கும் ரேவதி என்பவரிரிடமும் டவர் அமைக்கப் போவதாக கூறி 2,94,624 பண மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரேவதி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் டெல்லியைச் சேர்ந்த அபிஷேக் சைனி, சுமித் குப்தா, நரேந்தர் ராகவ், பர்வேஸ் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.