சென்னை மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வண்ணாரப்பேட்டை பென்சில் பேக்டரி- கொருக்குப்பேட்டை இடையே மின்சார ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் ரயிலில் ஏறி ஜன்னலோரம் அமர்ந்திருந்த பயணிகளிடமிருந்து செல்போனை பறிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து பயணிகள் கூச்சலிட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வாலிபர் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் அவரது இரண்டு கால்களும் ரயில் சக்கரத்தில் சிக்கியது. இதில் வாலிபரின் இடது கால் துண்டான நிலையில், வலது காலில் படுகாயம் ஏற்பட்டது.
இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கொருக்குப்பேட்டை பகுதியில் வசிக்கும் நவீன்(21) என்பது தெரியவந்தது. இவர் ரயிலின் வேகம் குறைவாக இயக்கப்படும் போது ஜன்னலோரம் அமர்ந்திருக்கும் பயணிகளிடமிருந்து செல்போனை பறித்து விட்டு தப்பி ஓடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் மீது காவல் நிலையங்களில் ஏற்கனவே 6 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.