மனைவியை கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் சரண் அடைந்த தொழிலாளியை காவல்துரையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள ஏனாதி கிராமத்தில் மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். டிரைவரான இவருக்கு ராதிகா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கோபித்துகொண்டு ராதிகா தனது மகளுடன் அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து 2 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த அவர் சில மாதங்களுக்கு முன்பு திரும்பி ஊருக்கு வந்து கணவருடன் வசித்து வந்துள்ளார். இதனைதொடர்ந்து ராதிகா அடிக்கடி யாரிடமோ செல்போனில் பேசிகொண்டிருந்ததால் மாடசாமி அவரை கண்டித்துள்ளார்.
மேலும் ராதிகா மீது சந்தேகமடைந்த மாடசாமி ஆத்திரமடைந்து கழுத்தை நெரித்து, தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்துள்ளார். இதற்குப்பின்னர் முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் மாடசாமி சரணடைந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த ராதிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து மனைவியை சந்தேகப்பட்டு கொலை செய்த மாடசாமி மீது வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர். இச்சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.