தமிழகத்தில் அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருக்கின்றனர். இவர்கள் 2 பேரின் வழிகாட்டுதலின்படி அ.தி.மு.க கட்சியானது செயல்பட்டு வருகிறது. ஆனால் திடீரென அ.தி.மு.க கட்சியில் ஒற்றைத்தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது அ.தி.முக. கட்சியில் அம்மா வகித்த பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார். இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய ஆதரவாளர்கள் மூலமாக பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் அடுத்த மாதம் 11-ம் தேதி நடைபெற இருக்கும் அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தின் போது அ.தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்படுவார் என அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து அரசியல் வியூக வகுப்பாளராக இருக்கும் சுனில், சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசியுள்ளார். இவர்கள் 2 பேரும் அரசியல் தொடர்பான பல விஷயங்களைப் பற்றி பேசியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு சுனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார்.
அப்போது தன்னுடைய செல்போன் மூலமாக எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு கொண்டார். அதன்பிறகு செல்போன் வாயிலாக ராகுல் காந்தியிடம் எடப்பாடி பழனிச்சாமி நலம் விசாரித்துள்ளார். இதேப்போன்று எடப்பாடியிடம் நலம் விசாரித்த ராகுல் காந்தி, அமலாக்கத்துறை தொந்தரவு கொடுப்பதாகவும், பா.ஜ.க கட்சியை விமர்சித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை தெரிந்து கொண்ட பிரதமர் மோடி இபிஎஸ் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி இருக்க ராகுல் காந்தி, இபிஎஸ் இடம் எதிர்க் கட்சிகளின் சார்பாக பொதுவாக நிற்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்குமாறு மட்டுமே கேட்டுக்கொண்டதாக எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர். மேலும் பன்னீர்செல்வம் தற்போது டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தினால் அவருக்கு சாதகமாக ஏதாவது நடக்க வாய்ப்பு இருந்தாலும், அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என அரசியல் வட்டாரங்கள் கூறி வருகிறது.