50 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்களிடமிருந்து இனி கட்டணம் வசூல் செய்ய உள்ளதாக போன்பே நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பயனாளர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ்களுக்கு செயல்முறை கட்டணத்தை நடைமுறைப்படுத்திய முதல் நிறுவனம் போன்பே என்று கூறப்படுகின்றது. இதுகுறித்து போன்பே நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: ‘ரீசார்ஜ் களைப் பொறுத்தவரை நாங்கள் மிகச்சிறிய அளவிலான கட்டண பரிசோதனையை தொடங்கியுள்ளோம். அதாவது 50 ரூபாய்க்கு குறைவாக ரீசார்ஜ் செய்பவர்களுக்கு கட்டணம் கிடையாது.
ஆனால் ரூபாய் 50 முதல் 100 வரை ரீசார்ஜ் செய்தால் ஒரு ரூபாயும், 100 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இரண்டு ரூபாயும் கட்டணமாக வசூல் செய்யப்படும். பல கிரெடிட் கார்டு நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூல் செய்வதை போன்று, நாங்களும் கட்டணம் வசூல் செய்ய தொடங்கியுள்ளோம். இது மிகச்சிறிய அளவிலான செயல்முறை கட்டணம் தான். அதுவும் கிரெடிட் கார்டு மூலம் நடைபெறும் மொபைல் ரீசார்ஜ்களுக்கு மட்டும்தான் இந்த கட்டணம் வசூல் செய்யப்படும். மேலும் போன்பே மூலமாக மேற்கொள்ளப்படும் பிற பரிவர்த்தனைகள் மற்றும் பரிமாற்றங்களுக்கு எந்தவித கட்டணமும் வசூல் செய்யப்படாது” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.