திருவட்டார் அருகே செல்போன் வாங்கித் தராத காரணத்தால் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே கோவிக்கோட்டுவிளை வீயனூர் பகுதியில் வினுகுமார் என்ற தொழிலாளி வசித்து வருகிறார். அவரின் மகன் கிஷோன்(14) ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். அவரின் மனைவி இறந்து விட்ட நிலையில், தன்னுடைய மகனை சகோதரியின் பராமரிப்பில் வினுகுமார் வளர்த்து வருகிறார். கிஷோன் அங்கேயே தங்கி ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார். வினுகுமார் அவருடைய தாயாருடன் வசிக்கிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கிஷோன் தன்னுடைய தந்தை வீட்டிற்கு வந்துள்ளான். அங்கு பாட்டியிடம் செல்போன் வாங்கி தரவேண்டுமென வலியுறுத்தியுள்ளார். ஆனால் பாட்டி செல்போன் வாங்கிக் கொடுக்காததால், அது சிறுவனுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கிஷோன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளான்.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். வெளியே சென்று வீடு திரும்பிய பாட்டி மற்றும் அவனின் தந்தை இருவரும் சிறுவன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு சம்பவம் பற்றி வினுகுமார் திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போன் வாங்கித் தராத காரணத்தால் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.