இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி,கொரோனா தொற்று பரவுகின்றது, தேர்தலை தள்ளி வையுங்கள் என அரசியல் கட்சிகள் சொல்லாத காரணத்தால் தேர்தல் ஆணையம் அதை செய்திருக்க வேண்டும். இந்த தேர்தல் முறை சரியாக வராது, பரப்புரை வேண்டாம், எல்லோரும் வேட்பாளரை அறிவித்து விடுங்கள், 15 நாட்களுக்கு பிறகு எல்லோரும் ஓட்டு போடுங்கள், அப்படி தேர்தல் ஆணையம் சொல்லி இருக்க வேண்டும். அதுதான் அவர்களுடைய கடமை. ஆனால் அவர்கள் சரியாக சிந்திக்க வில்லை.
ஒரு வெற்றிக்கு எப்படி ஆயிரம் காரணங்கள் இருக்கிறதோ அதேபோல் தோல்விக்கும் ஆயிரம் காரணம் இருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு நிகழ்வுக்கும் பல காரணங்கள் இருக்கும். மகாராஷ்ட்ராவில் அதை விடவும் பெருங்கூட்டம் ஏதோ கூடியிருக்கிறது அல்லது அங்கு தொற்று இன்னும் அதிகமாவதற்கான வாய்ப்பு அங்கு இருக்கிறது, அதைக் கண்டுபிடிக்க வேண்டும்.நான் எல்லா மாநிலங்களையும் தான் சொல்கிறேன், மகாராஷ்டிராவை மட்டும் சொல்லவில்லை.
நான் என்ன சொல்கிறேன் என்றால் கட்டுப்பாடு என்பது மிக மிக கடினமான விஷயம். ஒரு சமூகத்தை கட்டுப்படுத்தி, ஒரு சமூகத்தை நல்வழிப்படுத்தும் இந்த பாதையில் செல்லுங்கள் என்று சொல்வது எளிது. ஆனால் அந்தப் பாதையில் செல்ல வைப்பது மிக மிக சிரமம். மகாத்மா காந்தியின் உடைய சிறப்பு என்னவென்றால் அவ்வளவு பெரிய போராட்டங்களை வன்முறை இல்லாமல் அவர் செய்தது தான் அவருடைய சிறப்பு. அதனால்தான் அவருடைய புகழ் உலகம் முழுவதும் பரவியது.
சவுரி சௌராவில் ஒத்துழையாமை இயக்கத்தில் ஒரு காவல் நிலையத்தை தாக்கி விட்டார்கள் என்பதற்காக, அவர் தன்னுடைய ஒத்துழையாமை இயக்கத்தை தள்ளி வைத்தார். அப்போது ஜின்னாவிலிருந்து நேரு வரை அப்பொழுது எல்லாத் தலைவர்களும் எங்கேயோ ஒரு நிகழ்வு நடந்தது, அதற்காக போராட்டத்தை தள்ளி வைக்கலாமா என்று கேட்டபோது, அவர் சொன்னார் இன்னும் போராடுகின்ற அளவுக்கு இந்திய மக்கள் தயாராக இல்லை. அதனால் அவர்கள் தயாராகும் வரை நான் போராட்டத்தை தள்ளி வைக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.
ஆனால் அந்த சிரமம் நம் எல்லோருக்கும் இருக்கிறது. நான் ஒரு அரசை மட்டும் குறை சொல்ல விரும்பவில்லை. எல்லோருமே அதற்கான முயற்சிகளை எடுத்தால், இந்த பொது முடக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இல்லையென்று சொன்னால் பொது முடக்கம் மிகுந்த சிரமத்தை தரும். இது நம் வருங்காலத்தை அழித்து விடும். இதை அரசாங்கத்தில் இருப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.