குரங்கம்மை வைரஸ் பற்றி அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார்.
உலக அளவில் கொரோனா வைரஸ் கடந்த 2 வருடங்களாக பரவி வந்த நிலையில் தற்போது தொற்று குறைந்துள்ளது. ஆனால் புதிதாக குரங்கம்மை வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்று இந்தியாவில் சில மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக குரங்கம்மை வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தொடங்க இருக்கும் போட்டியின் தொடக்க விழாவில் உலகம் முழுவதும் இருந்து 2000-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இவர்களுக்கு குரங்கம்மை வைரஸ் தொற்று இல்லை என அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார். இவர் கிண்டியில் உள்ள குரங்கம்மை பரிசோதனை நிலையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வரும் வீரர்-வீராங்கனைகளுக்கு குரங்கம்மை வைரஸ் தொற்று மற்றும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது என்றார். அதன் பிறகு போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் கேரளாவில் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணிற்கு உதவுவதற்காக மகப்பேறு மருத்துவர் தயார் நிலையில் இருக்கிறார்.
இதனையடுத்து வெளிநாடுகளில் இருந்து வரும் வீர்ர்-வீராங்கனைகளுக்கு குரங்கம்மை வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும், ஒருவேளை யாருக்கேனும் தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் கூறினார். மேலும் கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட்டில் குரங்கம்மை வைரஸ் தொற்றை கண்டுபிடிப்பதற்கான ஆய்வகம் தொடங்கப்படும் எனவும், இந்த ஆய்வகத்தை தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்