தமிழகத்தில் முதல்முறையாக 44 ஆவது சர்வதேச சேஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று தொடங்கியது. அதில் பங்கேற்க பல்வேறு நாடுகளில் இருந்து செஸ் விளையாட்டு வீரர்கள் வந்துள்ளனர். அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 21 விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து விடுதிகளிலும் மருத்துவ வசதிகள் உள்ளது. அதில் எட்டு விடுதிகளில் பெரிய அளவிலான மருத்துவ முகாம்கள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து விடுதிகளிலும் யோகா பயிற்சி அளிக்கும் மருத்துவர்கள் உள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் பகுதியில் உள்ள 13 மருத்துவமனைகளில் விளையாட்டு வீரர்கள் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை மூலம் இரண்டு லட்சம் ரூபாய் வரை இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். அதற்கு மேல் மருத்துவ செலவு ஏற்பட்டாலும் அதையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.