நம்முடைய இளம் வயதில் உடம்பில் தேவையான அளவு வலிமையும், சக்தியும் இருக்கும். எனவே இந்த வயதில் தான் நம்மால் எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்பட்டு உழைக்க முடியும். வயதானால் நம்முடைய உடம்பில் வலிமை இருக்காது. அப்போது கஷ்டப்பட்டு உழைக்க நினைத்தால் முடியாது. இப்படி இருக்கையில் நாம் இப்போது கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை ஏதோ சாப்பிட்டோம், செலவழித்தோம் என்று ஒரு சிலர் இருக்கின்றனர். பிற்காலத்தில் நம்முடைய பிள்ளைகள் நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என்ற எண்ணத்தில் உழைக்கும் பணத்தை எதிர்காலத்திற்கு சேமித்து வைக்காமல் செலவழித்து விடுவார்கள்.
பணம் இருந்தால் மட்டுமே நம்முடைய சொந்த பந்தங்கள் எல்லாம் நம்மை தேடி வருவார்கள். பணம் இல்லையென்று தெரிந்தால் ஒருத்தர் கூட நம்மோடு இருக்க மாட்டார்கள். கஷ்டகாலத்தில் கூட பணம் தேவைப்பட்டால் கொடுத்து உதவ மாட்டார்கள்.(இது அனைவருக்கும் பொருந்தாது) உறவுகள் மட்டுமல்ல நாம் பெற்ற பிள்ளைகள் கூட அப்படிதான். பிள்ளைகளுக்கு திருமணமான பிறகு ஒருசிலர் தங்களுடைய பெற்றோர்களை பார்த்துக்கொள்வதில்லை. முதியோர் இல்லங்களில் கொண்டுபோய் சேர்க்கும் நிலைமை உருவாகிறது.
இன்னும் ஒரு சிலரோ வீட்டை விட்டே துரத்தி விடுவதால் வயதான பெற்றோர்கள் தெருவோரங்களுக்கு செல்லும் நிலைமை கூட ஏற்படுகின்றது. எனவே வயதான காலத்தில் எவருடைய உதவியும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு நம்முடைய இளம் வயதில் இருந்தே சேமித்து வைத்து கொள்ள தயாராக வேண்டும். யாராலும் பணத்தை சம்பாதிக்க முடியும். ஆனால் அதை பத்திரமாக எதிர்காலத்திற்கு சேமித்து வைப்பதே புத்திசாலித்தனம்.