சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள காணிக்கைபுரம் ரயில்வே கேட் சாலை கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது பெய்த மழை காரணமாக அந்த சாலை சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இது குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ரயில்வேகேட் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சாலையை சீரமைத்து தர அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.