சேலத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தார்கள்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அண்ணா பூங்கா அருகே சென்ற மாதம் 16ஆம் தேதி ராஜா என்பவர் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த சக்தி பிரபு மற்றும் குமாரசாமி பட்டியை சேர்ந்த ஸ்ரீ ரங்கன் உள்ளிட்டோர் மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்துள்ளார்கள். மேலும் கத்தியை காட்டி மிரட்டி ராஜாவிடம் இருந்து 2500 ரூபாய் பறித்துக் கொண்டு தப்பி விட்டார்கள்.
இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தார்கள். இவர்கள் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழிப்பறி என வழக்குகள் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவாகி இருந்தது. இந்த நிலையில் இவர்கள் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார்கள். அதன் பேரில் கமிஷனர் சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.