சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நகை கடன் தள்ளுபடி செய்யுமாறு இலங்கை தமிழர்கள் மனு ஒன்றை கொடுத்துள்ளார்கள்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள சத்யா நகர் பகுதியில் இருக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பத்துக்கு மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 35 குடும்பத்தினர் வசித்து வருகின்றோம்.
நாங்கள் கூட்டுறவு வங்கியில் 5 பவுனுக்கு குறைவாக நகையை அடமானம் வைத்து கடன் பெற்று இருக்கின்றோம். தமிழக அரசு நகைக்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டதில் நாங்கள் தகுதி வாய்ந்த பயனாளிகளாக இருக்கின்றோம். ஆனால் எங்களுக்கு இதுவரை நகைக்கடன் தள்ளுபடி செய்யவில்லை. மற்றவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்து அதற்கான ஆணையும் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால் தகுதி பெற்ற எங்களுக்கு நகை கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருக்கின்றார்கள்.