25 லட்சம் மோசடி செய்த வழக்கில் சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியின் கணவரை போலீசார் கைது செய்தனர். அதிகாரியை தேடி வருகின்றார்கள்.
சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் அருகே இருக்கும் ஜாகீர்ரெட்டிப்பட்டியில் வாழ்ந்து வருபவர் திருவேங்கடம். இவர் கட்டிட காண்டிராக்டர். இரண்டு வருடங்களுக்கு முன்பாக இவருடைய மகன் பிரசன்னாவுக்கு நெல்லையை சேர்ந்த பவித்ரா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றார்கள். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் மின்வாரிய காண்ட்ராக்டர். அவரின் மனைவி லீலா. இவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். திருவேங்கடம் மற்றும் மணிவண்ணன் இருவரும் நண்பர்கள். இந்நிலையில் மணிவண்ணன் மற்றும் அவரின் மனைவி லீலா, பவித்ராவிடம் சமாதானம் பேசுவதாக கூறினார்கள். இதைத்தொடர்ந்து சமாதானம் பேசி விட்டதாகவும் ரூபாய் 25 லட்சம் கொடுத்தால் விவாகரத்து தந்து விடுவதாக கூறினார் எனவும் திருவேங்கடத்திடம் கூறியுள்ளார்கள்.
அதனால் அவர் 25 லட்சத்தை மணிவண்ணனிடம் கொடுத்திருக்கின்றார். அதைப் பெற்றுக் கொண்ட மணிவண்ணன் அந்த பணத்தை பவித்ராவிடம் கொடுத்து விட்டேன் என நண்பரிடம் கூறியுள்ளார். இதனிடையில் பவித்ரா கணவர் பிரசன்னா மீது வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக நெல்லை மகளிர் போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதன் பிறகே தங்களிடம் வாங்கிய 25 லட்சத்தை மருமகளிடம் கொடுக்காமல் மணிவண்ணன் மற்றும் லீலா ஏமாற்றியது அவருக்கு தெரியவந்தது. இதனால் திருவேங்கடம் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பெரியார் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான லீலா மற்றும் அவரின் கணவர் மணிவண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து மணிவண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். தற்போது லீலாவை போலீசார் தேடி வருகிறார்கள்.