Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மேற்கு சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் என்ன ?

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி கடந்த 2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்கு பின் உருவான புதிய தொகுதி ஆகும். சேலம் இரண்டாவது மற்றும் ஓமலூர் தொகுதியில் இருந்து சில பகுதிகளை பிரித்து மேற்கு தொகுதி உருவாக்கப்பட்டது. வெள்ளி கொலுசு தயாரிப்பு மற்றும் கயிறு திரிப்பது ஆகியவை முக்கிய தொழிலாக உள்ளது. செங்கல் சூளைகளும் இங்கு அதிகம். தொகுதி உருவாக்கப்பட்ட பிறகு நடைபெற்ற 2 சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுக வெற்றிபெற்றுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவின் வெங்கடாசலம் எம்எல்ஏவாக உள்ளார். மேற்கு தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,97,985. தேங்காய் நாரிலிருந்து கயிறு திரிக்கும் தொழில் நடைபெறுவதால் கூட்டுறவு கயிறு விற்பனை சங்கம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. கயிறு மற்றும் தேங்காய் நார் பித்து ஏற்றுமதிக்கு வழி ஏற்படுத்த வேண்டும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

வெள்ளி கொலுசு தயாரிக்கும் தொழிலை குடிசைத் தொழிலாக செய்து வரும் மக்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாகவும், வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லும் போது காவல்துறையினரின் தொல்லை காரணமாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். விசைத்தறி தொழிலை ஊக்குவிக்கும் வகையில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

ஆளும் கட்சியினரின் தலையீடு காரணமாக செங்கல் சூளைக்கு தேவையான மண் கிடைப்பதில் ஏற்படும் சிக்கல் தீர்க்க வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொகுதி பக்கம் எம்எல்ஏ வருவதே இல்லை என குற்றம் சாட்டும் மக்கள் குப்பைகள் முறையாக அகற்றப்படவில்லை என்றும், 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். கட்டண தொழிலாளர்கள் அதிகமாக உள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

Categories

Tech |