1951ஆம் ஆண்டு சேலம் புறநகர் தொகுதியாக இருந்தது பின்னர் சேலம் இரண்டாவது தொகுதி என்றாகி, 2008ஆம் ஆண்டு நடைபெற்ற மறுசீரமைப்பில் பெயர் மாற்றம் பெற்றது சேலம் வடக்கு தொகுதி. விவசாயமும், கைத்தறி மற்றும் கொலுசு உற்பத்தியும் லாரி தொழிலும் இத்தொகுதியில் அதிகம். சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் அதிகளவாக திமுக 6 முறையும், அதிமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. தேமுதிக மற்றும் பாமக தலா 1 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது.
தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக திமுகவின் ராஜேந்திரன் உள்ளார். சேலம் வடக்கு தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,74,776 ஆகும். முதலமைச்சரின் சொந்த மாவட்டமாக இருந்தாலும் சேலம் மாநகராட்சியின் அலட்சியத்தால் பல பகுதிகளில் சுகாதார சீர்கேடு நிலவுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பாலம் கட்டும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை உள்ளது.
கண்ணன் குறிச்சி பகுதியில் உள்ள புதிய ஏரி மற்றும் மூக்கனேரி வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். நெசவாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஒருங்கிணைந்த வெள்ளி பொருள் வர்த்தக மையம் ஏற்படுத்த வேண்டும் என்பதும், வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கை. லாரிகளை பாதுகாப்பாக நிறுத்த ஏற்ற வகையில் தனி இடம் ஒதுக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
தொகுதியில் எம்எல்ஏ ராஜேந்திரன் பல்வேறு மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு இருந்தாலும் திமுகவை சேர்ந்தவர் என்பதால் பணிகளை மேற்கொள்ள ஆளும்கட்சி முட்டுக்கட்டை போடுவதாக புகார் உள்ளது. முதலமைச்சரின் மாவட்டத்திலேயே மக்களின் கோரிக்கைகள் ஆண்டு கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும் என்பதும், தொழில் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.