பார்ட்னர்ஷிப் அமைக்காதது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்..
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஆன டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நான்காவது டி20 நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 191 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிசப் பண்ட் 44 ரன்களும், கேப்டன் ரோகித் சர்மா 33 ரன்களும் குவித்தனர். பின்னர் 192 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்து 59 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் போட்டி முடிந்தபின் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் பேசுகையில், தொடக்கத்திலேயே இந்திய அணியினர் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். இருப்பினும் எங்களது பந்துவீச்சாளர்கள் அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்தது மகிழ்ச்சி.. அதேபோல சேசிங் செய்யும் போது எங்களது அணியில் வீரர்கள் யாரும் பெரிய அளவில் பாட்னர்ஷிப் அமைக்கவே இல்லை.. இந்த டார்கெட் எட்ட கூடியது தான். ஆனாலும் பார்ட்னர்ஷிப் அமைக்காதது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.
அதேபோல என்னுடைய ரன் அவுட் ஆட்டத்தை அப்படியே மாற்றிவிட்டது. இதுபோன்று நடப்பது எல்லாம் கிரிக்கெட்டில் சகஜம்தான்.. எங்களது அணியில் அகில் ஹுசேன் சிறப்பான முறையில் பந்து வீசினார். மொத்தமாக இந்த வெற்றிக்கு இந்திய அணி தகுதியானார்கள். அவர்களுக்கு எங்களது அணியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும் ஒரு வெற்றி என்பது எங்களுக்கு அவசியம் வேண்டும்.. நாளை (இன்று) நடைபெற உள்ள போட்டியில் நாங்கள் வெற்றி பெற முயற்சி செய்வோம் என அவர் கூறியுள்ளார்.