விழுப்புரத்தில் சைக்கிள் கடையின் சுவரில் ஓட்டை போட்டு ரூ.1.73 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் உள்ள நேருஜி சாலையில் இயங்கி வரும் பிரபல சைக்கிள் கடையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு சைக்கிள்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இக்கடையை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர் . அன்று நள்ளிரவு கடையின் சுவரில் ஓட்டை போட்டு நுழைந்த மர்ம கும்பல் கடையில் வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடிச் சென்றனர். மறுநாள் காலை கடையை திறக்க வந்த ஊழியர்கள் சுவரில் போடப்பட்டிருந்த ஓட்டையை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே கடையின் மேலாளர் சிவசங்கரன் (44)விழுப்புரம் நகர காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் சைக்கிள் கடைக்கும் அதன் அருகில் உள்ள தங்கும் விடுதிக்கும் இடையே உள்ள இடைவெளியில் நுழைந்த திருடர்கள் சைக்கிள் கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்து பணத்தை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. பின்னர் மோப்ப நாய் மற்றும் விரல் ரேகை நிபுணர்கள் மூலம் தடயங்கள் சேகரித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்திருட்டுச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.