சைக்கிள் மீது ஜீப் மோதிய விபத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு உள்பட 6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வலவிடாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ரகுபதி(32) என்பவர் கடலூர் மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டாக( பயிற்சி) இருக்கிறார். இவர் நேற்று மாலை குடும்பத்தினருடன் ஜீப்பில் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். இந்த ஜீப்பை போலீஸ்காரர் தமிழ்குமரன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மணகுப்பம் கூட்டு ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது லோகேஷ் என்ற சிறுவன் சைக்கிளில் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது ஜீப் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, அவரது மனைவி மரிய விஜயா, தாய் காசியம்மாள், தந்தை பாலு தமிழ்குமரன், லோகேஷ் ஆகியோரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் கிரேன் மூலம் விபத்துக்குள்ளான ஜீப்பை மீட்டனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.