பயங்கர விபத்தில் 11-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் அருகே விஷ்ணு நகர் பகுதியில் நாராயணமூர்த்தி – பொன்னி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு லட்சுமிபதி (16) என்ற மகன் இருந்துள்ளான். இவர் பழைய தாம்பரம் குளக்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறார். இந்த மாணவர் தினமும் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமிபதி வழக்கம் போல் சைக்கிளில் பள்ளிக்கு கிளம்பி சென்றார். இவர் சர்வீஸ் சாலை அருகே சென்ற போது பின்னால் வந்த ஒரு டாரஸ் லாரி லட்சுமிபதியின் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் லட்சுமிபதி லாரி டயரில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவ்வழியாக வந்த 4 டாரஸ் லாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில் தாம்பரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கடந்த வாரம் இதே சாலையில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் 2-வதாக மீண்டும் விபத்து நடந்துள்ளது. இந்த பகுதிகளில் அதிக அளவில் லாரிகளை செல்வதற்கு அனுமதிப்பதே விபத்து ஏற்படுவதற்கு காரணம்.
அதன் பிறகு போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் இந்த பகுதியில் போக்குவரத்து காவலர்களும் பணியில் இல்லை என்று கூறினார். இந்த பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்படும் என காவல்துறையினர் கூறிய பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் விபத்தில் பலியான மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிய பிறகு, லாரி டிரைவர் சந்திரசேகரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.