சொகுசு கப்பல் போதை விருந்து வழக்கில் பாலிவுட் தயாரிப்பாளர் இம்தியாஸ் ஹித்ரியின் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை விருந்து நிகழ்ச்சி நடப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 3-ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சொகுசு கப்பலில் அதிரடி சோதனை நடத்தியதில் 1.33 லட்ச ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதில் மாடல் அழகி முன்முன் டக்மிஷா, பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் 18 பேரை கைது செய்தனர். இதனிடையே ஆர்யன் கான் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவை நேற்று கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
மேலும் 14 நாட்கள் ஆரியன் கானை நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டில் உத்தரவிடப்பட்டதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சொகுசு கப்பலில் போதை விருந்து நடத்திய வழக்கில் தீவிர விசாரணை நடத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் இம்தியாஸ் ஹித்ரியின் வீட்டில் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மும்பையின் பாந்திரா பகுதியில் இருக்கும் இம்தியாஸின் வீடு மற்றும் அலுவலகத்தில் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சொகுசு கப்பல் போதை விருந்து வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிழவி வருவது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.