டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி விளையாடுவது தேர்வு குழுவினரின் கையில் தான் இருக்கிறது என்று பிசிசிஐயின் முக்கிய நிர்வாகியான அருண் துமால் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் விராட் கோலியை தெரியாதவர்களே கிடையாது. கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை வசமாக்கிய விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பேட்டிங்கில் சொதப்பி வருவது அவரது ரசிகர்களுக்கு கவலை அடைய செய்துள்ளது. தொடர்ந்து பேட்டிங்கில் சறுக்கல்களை சந்தித்து வருகிறார் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் விளாசியுள்ள விராட் கோலி கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக சதங்களை விளாசாமல் இருப்பது அவர் மீது விமர்சனங்களை எழ செய்கிறது.
அது மட்டும் இல்லாமல் நடந்து முடிந்த பல தொடர்களில் அவரால் சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை. தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வருகிறார். இது அனைவரது மத்தியிலும் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடரில் விராட் இடம் பிடிப்பாரா? தேர்வு குழு அவரை தேர்வு செய்யுமா? என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது. காரணம் விராட் கோலியின் மோசமான பேட்டிங் ஃபார்ம் தான்..
தற்போது வெஸ்ட் இண்டிஸ் அணியுடன் இந்தியா டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் விராட் கோலி டி20 உலக கோப்பையில் தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை தேர்வுக்குழு திங்கட்கிழமை அறிவிக்கிறது. அந்த தொடரில் விராட் கோலி இடம் வருவாரா என்பதே பெரிய சந்தேகமாக இருக்கிறது.
இந்நிலையில் வரும் டி20 உலக கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடுவது பற்றி பிசிசிஐயின் முக்கிய நிர்வாகியான அருண் துமால் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அவர் கூறியதாவது, விராட் கோலி சாதாரண வீரர் இல்லை. ஒரு சிறந்த ஆட்டக்காரர்.. இந்திய அணிக்காக அவர் செய்துள்ள பங்களிப்பு அளப்பரியது. நாங்களும் விராட் கோலி மீண்டும் இந்திய அணியில் இணைந்து சிறப்பாக ஆட வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறோம்..
ஆனால் தற்போது அவரது இடம் குறித்து எதையும் உறுதியாக சொல்ல முடியாது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி விளையாடுவாரா அல்லது மாட்டாரா என்பது முற்றிலும் தேர்வு குழுவினரின் கையில் தான் இருக்கிறது.. அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதை தான் நாங்கள் ஏற்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் டி20 கிரிக்கெட் தொடரில் விராட் கோலி விளையாடுவது முற்றிலும் தேர்வு குழுவினர் கையில் தான் என்பது உறுதியாகிவிட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட்டில் ஓய்வில் இருந்து வரும் விராட் கோலி ஆசிய கோப்பைக்கு திரும்பி, அதில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே வருகின்ற டி20 உலக கோப்பை தொடரில் இடம் கிடைக்கும் என்பது அனைவரின் கருத்தாக இருக்கிறது..