சொத்து பிரச்சனை காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் உள்ள 7-வது வார்டில் சின்னகருப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி அமிர்தசெல்வி. இந்நிலையில் அமிர்தசெல்விவின் தந்தையான சுடலை முத்துவிற்கு பூர்விக சொத்து உள்ளது. இந்த சொத்தை முழுவதுமாக சுடலை முத்து அவரது மகனுக்கு எழுதி கொடுத்துள்ளார். இதனால் எனக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என அமிர்தசெல்வி கேட்டுள்ளார். ஆனாலும் சொத்தில் பங்கு தராததால் அமிர்தசெல்வி மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து விரக்தியடைந்த அவர் நேற்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 1 லிட்டர் மண்ணெண்ணெயுடன் சென்று அலுவலக வளாகத்தில் நின்று தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக அவரை தடுத்தி நிறுத்தியுள்ளனர். மேலும் அவரை தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.