புதுக்கோட்டை மாவட்டம் மறவன் பட்டியில் வசித்து வந்தவர் திலகராணி. இவருக்கு ஐந்து மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு கொடுமை செய்ததால் தன்னுடைய கணவனை 2006ஆம் ஆண்டு கொலை செய்துள்ளார். இதனால் நான்கு மாத கருவாக 5 வது மகன் முத்துவை வயிற்றில் சுமந்துகொண்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையானார். தாய் சிறைக்கு சென்றதால் மூத்த மகன் 4 பேரும் தன்னுடைய தாத்தா வீட்டில் வாழ்ந்து வந்தனர்.
தன் தந்தையை கொலை செய்து ஜெயிலுக்கு போய் வந்ததால் தாயுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாமல் வாழ்ந்து வந்தனர். தாயுடன் சிறை தண்டனையில் இருக்கும்போது பிறந்த ஐந்தாவது மகன் மட்டும் இருந்துள்ளார். இதனை அடுத்து தன்னுடைய கணவருக்கு சொந்தமான வீட்டில் திலகராணி வசித்து வந்த நிலையில் அந்த வீடு மற்றும் சொத்துக்களை பிரித்து தர வேண்டும் என்று நான்கு மகன்களும் சண்டை போட்டுள்ளனர். ஆனால் திலகராணி உங்களுக்கு சொத்து தரமுடியாது என்று மறுத்துள்ளார்.
இந்நிலையில் திலகராணி தன்னுடைய ஐந்தாவது மகன் முத்துவுடன் புதுக்கோட்டை செல்வதற்காக மறவன்பட்டி பேருந்து நிலையத்தில் நின்றுபோது அவருடைய மூத்த மகன் ஆனந்த் தங்களுக்கு சொத்து தராத கோபத்தில் திலகராணியை பெற்ற தாய் என்று கூட எண்ணிப் பார்க்காமல் அரிவாளால் தலையை துண்டித்துள்ளார்.
அந்த தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனால் ஆனந்தை காவல்துறையினர் கைது செய்து பின்னர் சிறையில் அடைத்து விசாரித்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றிய வழக்கு புதுக்கோட்டை மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த நிலையில் இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்றது. அதன் பின்னர் தாயைக் கொன்ற மகனுக்கு தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் கோர்ட் பரபரப்பான தீர்ப்பை வழங்கியது.