கிருஷ்ணகிரி மாவட்டம் பீ.கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்(23). இவர் குமுதேப்பள்ளியை சேர்ந்த தனது நண்பர் முருகேசன்(26) வீட்டிற்கு அடிக்கடின் சென்று வருவார். அப்போது சந்தோஷும் முருகேசனின் தங்கை மீனாவும் காதலிக்க தொடங்கினர். இந்த நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சந்தோஷ், மீனாவை வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்,
அண்மையில் முருகேசன் வீட்டார் தங்களது நிலத்தை விற்க முயன்றபோது மீனாவின் சொத்தை பிரித்து தருமாறு சந்தோஷ் கேட்டதாக கூறப்படுகிறது. காதல் திருமணம் செய்ததற்கே கோபமாக இருந்த முருகேசன், சொத்தை கேட்டதால் மேலும் ஆத்திரமடைந்துள்ளார். இந்நிலையில், நேற்று வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய சந்தோசை தியாகரசனப்பள்ளி என்னுமிடத்தில் வைத்து முருகேசன் மற்றும் அவர்களது நண்பர்களான குமார் (24), 12ஆம் வகுப்பு மாணவன் ஒருவன்(17) ஆகிய மூவரும் தாக்க முயன்றனர்.
அப்போது தப்பி ஓடிய சந்தோஷை மாந்தோப்பில் வைத்து மூவரும் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்துள்ளனர். தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி போலீசார் உடலை மீட்டு, தலைமறைவாக இருந்த சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.