விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மதுக்கூர் அருகே கீழ்க்குறிச்சி கிராமத்தில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கரிகாலன், நரசிம்மன் மற்றும் இளையராஜா என்ற 3 மகன்கள் இருக்கின்றனர். இதில் கரிகாலன் குடும்பத்துடன் சிங்கப்பூரிலும், நரசிம்மன் மன்னார்குடியிலும், இளையராஜா தன்னுடைய தந்தையுடன் தங்கி விவசாயமும் செய்து வந்துள்ளார். இதில் பன்னீர்செல்வம் தன்னுடைய மகன்களுக்கு சொத்தை பிரித்துக் கொடுத்த நிலையில், இளையராஜா தன்னுடைய சொத்து மற்றும் நரசிம்மனுக்கு சொந்தமான ஒரு பம்பு செட் ஆகியவற்றை வேறொரு பெண்ணுக்கு எழுதி வைத்துள்ளார். இதனால் அண்ணன், தம்பிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இளையராஜா தன்னுடைய குடும்பத்துடன் நேற்று குலதெய்வ கோவிலுக்கு கிடாவெட்டி பொங்கல் வைத்துவிட்டு, தன்னுடைய தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நரசிம்மனுக்கும் இளையராஜாவுக்கும் திடீரென ஏற்பட்ட தகராறில் ஆத்திரத்தில் நரசிம்மன், இளையராஜாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார். இது குறித்து நரசிம்மன் பாண்டியன் என்பவரிடம் போன் செய்து கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டியன் மதுக்கூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இளையராஜாவின் உடலை மீட்டு பிரேத பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நரசிம்மனை வலைவீசி தேடி வருகின்றனர்.