சொத்து தகராறில் மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள 2 பெண்களை தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள மாமரத்துப்பட்டியில் பெரியண்ண கவுண்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாப்பாயி(68) என்ற மகளும், கந்தசாமி(65) என்ற மகனும் உள்ளனர். தற்போது பாப்பாயி குடும்பத்தினருடன் தனது தந்தைக்கு சொந்தமான இடத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கந்தசாமி பாப்பாயி வசிக்கும் வீட்டை காலி செய்து தருமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
இதற்கு பாப்பாயி மறுத்த நிலையில் சம்பவத்தன்று கந்தசாமி, அவரது மனைவி லட்சுமி, மகள் செல்வராணி, மருமகன் சுதாகரன் ஆகியோர் பாப்பாயி வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பாப்பாயி வீட்டை காலி செய்ய வலியுறுத்தி வீட்டில் இருந்த டிவி, மிக்ஸி, பிரிட்ஜ் போன்ற பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் பாப்பாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதில் காயமடைந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து பாப்பாயி மோகனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கந்தசாமி மற்றும் அவரது மருமகன் சுதாகரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் தலைமறைவாக உள்ள செல்வரணி மற்றும் லட்சுமியை தேடி வருகின்றனர்.