தமிழகத்தில் பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு, நகர்ப்புற உள்ளாட்சிகளில் சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குடியிருப்பு கட்டடங்களுக்கு, 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு உள்ளாட்சியிலும் சொத்து வரி நடைமுறையை, வெளிப்படையாக அறிவிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதன்படி, அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதுபற்றி, குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், சில ஆண்டுகளில், அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. இதன்படி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் புதிய நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
பிரதான உள்ளாட்சியிலும், இணைக்கப்பட்ட உள்ளாட்சிகளிலும் சொத்து வரி மதிப்பு புள்ளிகள் வேறுபட்டு இருக்கும். மேலும் இந்த புள்ளிகளில் எது அதிகபட்சம் என்று பார்த்து சமன் செய்யாமல், உள்ளது உள்ளபடி என்ற அடிப்படையில், பழைய மதிப்பு புள்ளிகள் மீது, புதிய சொத்து வரி உயர்வை அமல்படுத்த, உள்ளாட்சி அமைப்புகள் முடிவு செய்திருக்கின்றன. மேலும் இதன் அடிப்படையில் சொத்து வரி உயர்வு அமல்படுத்தப்படுகிறது. இதனால், புதிதாக மாநகராட்சி, நகராட்சிகளில் இணைக்கப்பட்ட பகுதி மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளதுஎன அவர்கள் கூறியுள்ளனர்.