சொத்து வரி உயர்வை கண்டித்து வருகிற எட்டாம் தேதி தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழக அரசு 150 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தி இருப்பது பெரும் கண்டனத்திற்குரியது. இந்த அறிவிப்பால் மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். சொந்தமாக தொழில் செய்வோர், வாடகை இடங்களில் தொழில் செய்பவர்கள், வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள், வீடு வாடகைக்கு விடுபவர்கள் என அனைத்து தரப்பினரும் இதனால் பாதிப்படைந்துள்ளனர்.
எனவே தமிழக அரசு உடனடியாக சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருகிற எட்டாம் தேதி காலை 11 மணி அளவில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை குழு உறுப்பினர் நாகேந்திரன், வானதி ஸ்ரீனிவாசன் ,ஆர் காந்தி, சரஸ்வதி உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று ஆதரவு தர வேண்டும் என வேண்டுகிறோம்” என்று அண்ணாமலை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.