சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, மாநகராட்சி தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சியின் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மார்ச் 30ம் தேதி அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மே 30ஆம் தேதி சென்னை மாநகராட்சி சொத்து வரியை உயர்த்தியது தொடர்பான தீர்மானத்தையும் நிறைவேற்றியது. இந்த அரசாணை, மாநகராட்சியின் தீர்மானத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணை நடைபெற்றது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், சொத்து வரி உயர்வு தொடர்பாக மாநகராட்சி தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர அரசு தீர்மானிக்க முடியாது என வாதிடப்பட்டது. மேலும் மத்திய நிதி குழு அறிக்கை அடிப்படையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், சொத்து வரி கணக்கீடு முறை நடைமுறை முறையாக பின்பற்றவில்லை என வாதிடப்பட்டது. இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு, சென்னையில் 1998 ஆம் ஆண்டுக்கு பின் சொத்து வரி உயர்த்தப்படவில்லை எனவும், வரியை உயர்த்துவதற்கான அவசியம் குறித்தும் ஆவண ஆதாரங்களுடன் விளக்கமாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மொத்த விலை குறியீடு, பண வீக்கம், சந்தை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழு அமைத்த பரிந்துரை அடிப்படையில் சொத்துவரி உயர்த்தப்பட்டதாக தெரிவித்த அரசு தரப்பில், கடந்த 1977 ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்ட நடைமுறையை கடைபிடித்தே தற்போது சொத்துவரி உயர்த்தப்பட்டதாக கூறி அது தொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்தது.
அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, மக்கள் நலத்திட்டங்களுக்கு தேவையான நிதியையும், அரசின் செலவினங்களுக்காகவும், வருவாய் திரட்டுவதும், வரிவிதிப்பால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை சமன்படுத்துவதும் மக்கள் நல அரசுக்கு அவசியமானது என்பதால் வரி விதிப்பை வெளிப்படை தன்மையுடன் செயல்களுக்கு அப்பாற்பட்டு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். நாட்டினுடைய பொருளாதார நலனுக்காக நிதிக்குழு அளித்த பரிந்துரைபடி சொத்து வரியை உயர்த்தியதில் எந்த தவறும் இல்லை என தெரிவித்திருந்த நீதிபதி, சொத்து வரியை உயர்த்துவது குறித்து அரசாணை என்பது ஆலோசனையாக இருக்கிறதே தவிர உத்தரவாதமாக இல்லை என தெளிவு படுத்தினார்.
இந்த அரசாணை அடிப்படையில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும், கடந்த 30 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த சொத்து வரி மாற்றி அமைக்கப்பட்டதற்கான காரணங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்ட நீதிபதி அந்த சொத்து வரி உயர்வு தொடர்பான அரசாணையும், மாநகராட்சி தீர்மானங்களும் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளார். அதற்கு எதிரான வழக்குகளையெல்லாம் நிராகரித்துள்ளார். மேலும் அதேசமயம் சென்னையை பொருத்தவரை சொத்துவரி செலுத்தும் பல லட்சம் பேரில் 30 பேர் தெரிவித்த ஆட்சேபனங்களை முறையாக பரிசீலித்திருந்தால் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்திருக்காது என கருத்து தெரிவித்தனர்.