மயக்க ஊசி போட்டு உறவினர்கள் வீட்டில் கொள்ளையடித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திட்டக்குடி சேர்ந்த தம்பதிகள் கிருஷ்ணமூர்த்தி – ராசாத்தி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கிருஷ்ணமூர்த்தியின் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதனிடையே சம்பவத்தன்று கிருஷ்ணமூர்த்தியின் தந்தையின் சிகிச்சை முடிந்து ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது வழியில் அவரின் உறவுக்கார பெண்ணான பெரம்பலூரை சேர்ந்த சத்யாவை சந்தித்துள்ளார். அதன்பின்னர் அதே ஆட்டோவில் சத்யாவையும் ஏற்றிக்கொண்டு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளார்.
இந்நிலையில் சத்யா கிருஷ்ணமூர்த்தியிடம் தன்னிடம் கொரோனா தடுப்பூசி இருப்பதாகவும், அதைப் போட்டுக் கொண்டால் கொரோனா வராது என்றும் கூறியுள்ளார். இதை நம்பிய கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி, மற்றும் 2 மகள்கள் என அனைவரும் ஊசி போட்டுக் கொள்ள சம்மதித்துள்ளனர். இதனையடுத்து தனது கைவரிசையை காட்டிய சத்தியா அவர்கள் அனைவருக்கும் மயக்க ஊசியை செலுத்தியுள்ளார். இந்நிலையில் அவர்கள் மயங்கிய பிறகு கிருஷ்ணமூர்த்தி மனைவி மற்றும் மகள்கள் அணிந்திருந்த 19 பவுன் நகைகளையும் பீரோவில் இருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து மறுநாள் காலை மயக்கம் தெளிந்து அவர்கள் பார்த்தபோது கழுத்தில் போடப்பட்டிருந்த நகையும் மற்றும் பீரோவில் வைத்திருந்த பணமும் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிருஷ்ணமூர்த்தி இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து மங்களூர் பகுதியில் சத்யாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.