இயக்குனர் சேரன் தனது சொந்த ஊரில் நடந்த சாதி கலவரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தனது திறமையால் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சேரன். இவர் இயக்கிய தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராஃப், பாண்டவர் பூமி, போன்ற திரைப்படங்கள் இவரை உச்சத்திற்கு அழைத்துச் சென்றன. இணையதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சேரன் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஏதாவது பதிவிட்டு வருவது வழக்கம். இந்த வரிசையில் தனது சொந்த ஊரில் நடைபெற்ற சாதிக் கலவரத்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இயக்குனர் சேரனின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பழையூர் பட்டி ஆகும். இந்த ஊரில் பொங்கலன்று இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல் சாதி கலவரமாக மாறவே, அப்பாவி மக்கள் பலர் தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு இயக்குனர் சேரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது, எங்கள் “கிராமத்தில் இவ்வாறு ஒருபோதும் நடந்ததில்லை.! தாய் பிள்ளையைப் போல் பழகி வருகிறோம்.! சில விஷமிகள் இவ்வாறு செய்ததை பெரியவர்கள் தடுக்கவேண்டும்.. பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு என்னுடைய ஆறுதல்கள்..” என அவர் பதிவிட்டுள்ளார்.