கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த 27 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தற்போது பரவிவரும் நிலையில் 300க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளது. அதே நேரம் சிகிச்சைக்கு வசூலிக்கப்படும் கட்டண வரம்பையும் அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி லேசான அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளிடம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 7,500 ரூபாய் வரையும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளிடம் 15,000 வரையும் தான் வசூலிக்க அரசு அறிவுறுத்தியது.
ஆனால் இதனை மீறி பல தனியார் மருத்துவமனைகள் லட்சக்கணக்கான ரூபாயை கட்டணமாக வசூலித்துள்ளது. இது குறித்து பல்வேறு புகார்கள் எழுந்ததால் தமிழகம் முழுவதிலும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதிக கட்டணம் வசூலிப்பதாக 27 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றில் எட்டு மருத்துவமனைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
அதோடு 18 மருத்துவமனைகளுக்கு அதிகமாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை நோயாளிகளிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனாவிற்கு சிகிச்சை கொடுக்கும் தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் விவரம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.